சென்னை: தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து சென்னை நிருபர்கள் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வேல்முருகன், ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறுகையில், "இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூகத்திற்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
மொழிவாரி கணக்கெடுப்பு: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் மொழிவாரி கணக்கெடுப்பும் தமிழக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை உயர்த்த உதவும். அந்த வகையில் மொழி, கல்வி உள்ளிட்ட அனைத்து தரவுகளை சேகரிக்கும் ஒரு கணக்கெடுப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும். அதன் மூலம் ஒரு சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடுகளை வழங்க முடியும்.
கணக்கெடுப்பே சமூகநீதி: இதனால் குறைவாக இருக்கின்ற சமூகங்கள் அதிக அளவில் இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளவதை தவிர்க்கலாம். இவ்வாறு சமமாக வழங்குவது தான் சமூக நீதி ஆகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தாராளமாக நடத்தலாம். இங்கே கூடியுள்ள இயக்கங்கள் ஒன்று சேர்ந்து முதலமைச்சரை நேரடியாக சந்தித்து ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை வைக்க இருக்கின்றோம். முதலமைச்சர் எங்களுக்கான நேரம் ஒதுக்கி எங்களை அழைத்துப் பேசி சமூகநீதி குறித்தான அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்.
இதையும் படிங்க: "மதமும் சாதியும் மனிதர்களை வெறுக்க வைக்கும்"... பயணம் குறித்து அஜித் பேசிய வீடியோ வைரல்!
மற்ற மாநிலங்களும் இட ஒதிக்கீடும்: பீகார், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு போல் தமிழகத்திலும் நடத்த வேண்டும். மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு மூலம் புள்ளி விவரங்களை சேகரித்து வைப்பதற்கு முழு உரிமை உள்ளது.எனவே சமூக நீதி அரசான திமுக அரசிடம் இந்த கோரிக்கையை வைக்கின்றோம். நீங்கள் இதற்கான முன்னேற்பாடுகளை எடுங்கள் இதில் என்ன இடர்பாடுகள் வந்தாலும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் நாங்கள் உங்கள் பக்கம் நிற்போம்.
கணக்கெடுப்பு எடுக்கும் முறை: தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களின் நிலங்களுக்கும் சென்று, ஒவ்வொருவரின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும். மேலும் அதில் முக்கியமாக கல்வி தகுதி, வருமானம், மொழி, சாதி என்ன என்பது குறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.
அதே போல் வடமாநிலங்களிலிருந்து வரக்கூடியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் ஆதிக்கம் இங்கு அதிகரித்து விட்டது. ஆகையால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் தமிழக மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்