சேலம் : சேலம், மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 64வது ஆண்டு விழா சேலத்தில் இன்று (அக். 5) நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பேசுகையில், "உங்களுக்கான பாதைகள் நிறைய உள்ளது. வீரர்கள் வாயை திறந்து பேசினால் மட்டும் தான் பயிற்சியாளரிடம் இருந்து ரிசல்ட் கிடைக்கும். உங்களுக்கு என்ன சந்தேகம் உள்ளதோ அதை கேட்டால் மட்டும் தான் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியும். புரிதல் மிக முக்கியம். நான் மிகவும் அமைதியான பழக்கம் கொண்டவன். நிறைய பேசுங்கள். உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
கடின உழைப்பு முக்கியம். தன்னம்பிக்கையை என்றும் விடக்கூடாது. நமது திறமைக்கு பஞ்சம் இல்லை. அதை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. வீரர்களாகிய நீங்கள் முன்னேற வேண்டும். தடைகள் எல்லாம் படிகளாக நினைத்து பயிற்சி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது!
நான் வாழ்க்கையில் மிக அதிக அளவில் கஷ்டப்பட்டேன். சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டத்தை சந்தித்தேன்.
பேருந்தில் செல்ல காசு இல்லாமல், சாப்பாட்டிற்கு காசு இல்லாமல் கூட இருந்தேன். ஒரு சாதாரண கிராமத்திலிருந்து வந்தேன். என்னுடைய கிராமத்தை யாருக்கும் தெரியாது. ஆனால், நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நகர வாழ்க்கையில் உள்ள நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும்.
என்னைப்போல நிறைய நடராஜன் உருவாக வேண்டும் என்றால் உடற்பயிற்சி மிக மிக முக்கியம். ஒரு விளையாட்டு வீரருக்கு மூலதனமே உடல்தான். அதை எவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்களோ உங்களுக்கு நல்ல வெற்றியைக் கொடுக்கும். எனக்கு இதுவரை மூன்று, நான்கு ஆபரேஷன் நடந்துள்ளது. இப்பொழுது கூட ஒரு ஆபரேஷன் நடந்துள்ளது. அந்த வலியில் தான் உங்களிடம் பேசி வருகிறேன். விளையாட்டு வீரருக்கு இதெல்லாம் சகஜம்தான். இங்கிருந்து கடினமாக உழையுங்கள்" என்றார்.
விழாவில் சேலம் கிரிக்கெட் அசோசியேஷன் பிரதிநிதிகள், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்