அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வானவன நல்லூர் பகுதியில் உள்ள வளவன் ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பாசன ஏரியில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சவுடு மணலை பொக்லின் எந்திரம் மூலம் சட்டவிரோதமாக அள்ளிச்செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இதனைக் கண்டித்து, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலைவாணனிடம் அக்கிராம மக்கள் புகாரளித்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கலைவாணன், மக்களிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது, செல்போனில் வீடியோ எடுத்தவரின் கேமராவை வட்டாட்சியர் கலைவாணன் பறிக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி காவல்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து வட்டாட்சியர் கலைவாணன் கூறியதாவது, வளவனேரியில் கடத்துவதற்காக மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. மணலை பறிமுதல் செய்ய வாகனங்கள் சென்ற போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வட்டாட்சியர் வரவேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் நேரில் சென்று விசாரித்தேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டம் கூடினால் அலாரம் அடிக்கும் - தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் கருவி!