மனித இனம் கொள்ளை நோயால் பாதிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. தட்டம்மை, பிளேக், காலரா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு கடந்த காலங்களில் மனிதர்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். அதேபோல் தான் கரோனா வைரஸ் தொற்றும் உலகம் முழுவதும் பரவிவருகிறது.
இதிலிருந்து பாதுகாக்கும் ஒரே வழி ஊரடங்கு மட்டும் தான். ஊரடங்கு நீண்ட நாள்களாக நீடித்து வருவதால் தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் தலைமை ஆசிரியை ஒருவர், தன்னிடம் பயிலும் எந்த மாணவனும் பசியால் வாடக் கூடாது என்ற மனித நேயத்தோடு மாணவர்களின் வீடு தேடிச் சென்று நிதியுதவி செய்துள்ள நிகழ்வு அரியலூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தூப்பாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 34 மாணவர்கள், 28 மாணவிகள் உள்பட மொத்தம் 62 பேர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் விவசாய தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். தற்போது அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் வேலைக்குச் செல்ல முடியாமல், அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை கண்ணகி தனது கணவருடன் இணைந்து தூப்பாபுரம் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கி பசியைப் போக்கியுள்ளார். பொதுமக்கள் படும் துயரத்தைக் களைய மாற்றுத்திறனாளிகள் கூட உதவுவதை தொலைக்காட்சியின் வாயிலாகப் பார்த்து தானும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது கணவர் துரைசாமி, தனது மகன்கள் ஆகியோரின் ஒப்புதலோடு இந்த உதவியைச் செய்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளையும் வழங்கினார்.
தற்பொழுது குடும்பம் உள்ள நிலையில் தலைமை ஆசிரியை வழங்கிய ஆயிரம் ரூபாய் பெரிய உதவியாக இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினர். இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் தன்னிடம் பயிலும் மாணவர்களின் குடும்பங்களின் துயர் துடைக்க நிதியுதவி செய்த தலைமை ஆசிரியையை அப்பகுதி மக்கள் மன மகிழ்வுடன் பாராட்டி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்த சிபிஎஸ்சி தயார்!