கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டிலுள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரியலூர் மாவட்ட புறவழிச்சாலையிலுள்ள மதுபானக் கடையில் சிலர் பூட்டை உடைத்து, கடையிலிருந்த 790 மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ஒரு லட்சத்து 55 ஆயிரம் எனக்கூறுகிறார் கடையின் மேற்பார்வையாளர் வைத்தியநாதன்.
இச்சம்பவம் குறித்து பேசிய அவர், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து மாநிலத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் சிலர், கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக, கடையின் வாயிலில் மிளகாய்ப் பொடியினை தூவிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, கீழக்காவட்டாங்குறிச்சியிலுள்ள மதுபானக் கடையிலும், சுமார் 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவருவது காவல்துறையினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு!