பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்கள் எந்தப் படிப்பில் சேர்வது என்பது அவர்கள் எடுக்கும் மதிப்பெண் பொருத்தே அமைகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிப்பதற்கு ஆர்வம் காட்டிவந்தனர். ஆனால் மத்திய அரசு மருத்துவக் கல்வி பயில நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறியுள்ளதால் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மருத்துவம் படிப்புகளில் நுழைய முடியாத சூழ்நிலை உள்ளது.
மேலும், பொறியியல் படிப்புகள் படித்தவர்கள் பெரும்பாலானோர் அவர்களுக்கு ஏற்ற வேலையில்லாத காரணத்தால் ஏதோ ஒரு வேலையில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் தற்போது கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்து படிப்பதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்கு கல்லூரி படிப்பு போதுமானதாக உள்ளது.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 13 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். விண்ணப்பம் வாங்க வந்தவர்களில் மாணவி ஒருவர் கூறும்போது, பிளஸ் டூ வகுப்பில் 450 மதிப்பெண் எடுத்துள்ளதாகவும், பொறியியல் படிப்பு படித்தவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதால், தான் கல்லூரியில் சேர்வதாகவும் தெரிவித்தார். மேலும், போட்டித் தேர்வுகள் மூலம் தான் அரசு பணியில் சேர்வதற்கு கல்லூரி சரியான வாய்ப்பாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்