தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உதவி வட்டாட்சியர் சரவணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சாத்தமங்கலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கும்பகோணத்திலிருந்து அரியலூருக்கு வந்த பாரத ஸ்டேட் வங்கியின் வாகனத்தைச் சோதனையிட்டபோது போதுமான ஆவணங்களின்றி ஐந்து கோடி ரூபாய் கொண்டுவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தை அரியலூர் கோட்டாட்சியர் அலுவலத்திற்குப் பறக்கும்படை அலுவலர்கள் பாதுகாப்பாக கொண்டுவந்தனர். அங்கு வைத்து தேர்தல் அலுவலரும், அரியலூர் கோட்டாட்சியருமான ஏழுமலை வாகனத்தில் பணத்துடன் வந்த பாரத ஸ்டேட் வங்கி உதவியாளர் வினோத் குமார், இரண்டு பாதுகாவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதனையடுத்து ஐந்து கோடி ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், உரிய ஆவணங்களை மாவட்ட பரிசீலனைக் குழுவிடம் சமர்ப்பித்து பின் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டாட்சியர் ஏழுமலை வங்கி உதவியாளரிடம் கூறினார்.
தேர்தல் நடைமுறையை அறிந்தும் அரசு வங்கிக்கு நடைபெறும் பணப்பரிமாற்றங்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்றது அங்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.