அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவுடை நம்பி (56). சிறப்பு துணைக் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், இவர் தனது இருசக்கர வாகனத்தில் வரும்போது அப்பகுதியில் தவறி கீழே விழுந்து கிடந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியே வந்த வட்டாட்சியர் குமரையா உள்ளிட்ட அலுவலர்கள் காவலர் விழுந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு உடனடியாக ஆண்டிமடம் ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து அறிவுடை நம்பியின் உடல், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அறிவுடை நம்பிக்கு செல்வகுமாரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
இவரது உடலுக்கு காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் காவலர்கள் மலர் வைத்து மரியாதை செய்தனர். மேலும், 21 குண்டுகள் முழங்க அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்