உலகை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இச்சூழலில் இந்நோய்த் தொற்றின் மருந்தாக நிலவேம்பு குடிநீர் சூரணம், ஆடாதோடை குடிநீர் பொடி, கபசுரக் கடிநீர் சூரணம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைக் கேள்விப்பட்ட பொதுமக்கள், நாட்டு மருந்து கடைகளுக்கும், அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ பிரிவிற்கும் விரைந்தனர். ஆனால் பொதுமக்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே. தனியார் நாட்டு மருந்து கடைகளில் கபசுரக் குடிநீர், வாத சுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் தங்களிடம் இருப்பு இல்லை என்று எழுதி தொங்கவிட்டுள்ளனர்.
வாட்ஸ்அப்பில் உலா வரும் கோரோசனம் மாத்திரையும், கரோனாவும் - எது உண்மை..?
அரசு மருத்துவமனை சித்த மருத்துவமனைக்குச் சென்றால் அங்கும் இல்லை. ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பினால், அரசிடமிருந்து இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா தொற்று ஒரு பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக கபசுரக் குடிநீர் பொடியை, மாநில அரசிடமிருந்து கேட்டு பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.