அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஆனந்தவாடி என்ற கிராமத்தில் உள்ளது. இச்சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல் எடுக்க அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, கிராமத்திற்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது அரசு சிமெண்ட் தொழிற்சாலை வளாகத்திலேயே புதிய ஆலை நிறுவ 809.09 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ஆண்டிற்கு 10 லட்சம் டன் உற்பத்தித் திறன்கொண்ட புதிய ஆலை நிறுவப்பட்டு அண்மையில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலைக்கான சுண்ணாம்புக்கல் ஆனந்தவாடி கிராமத்திலிருந்து எடுப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்குத் தேவையான சாலை வசதி, மருத்துவமனை வசதிகள், ஸ்மார்ட் வகுப்பு வசதிகள், குடிநீர் வசதி போன்ற பல்வேறு வசதிகள் செய்துதர கோரினார்கள்.
மேலும், வேலைக்கு காத்திருப்போரில் முதல்கட்டமாக 30 நபர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 27 நபர்களுக்கும் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஒப்பந்தப்பணி வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் வரும் 5ஆம் தேதி முதல் ஆனந்தவாடி சுண்ணாம்பு சுரங்கப் பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் எடுக்கப்படவுள்ளது.
மேலும், அரசு சிமெண்ட் ஆலைகளில் தயாரிக்கப்படும் சிமெண்ட்கள் ஊரக உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வீட்டு வசதித் துறை போன்ற துறைகளின் பணிகளுக்கு இந்த சிமெண்டை பயன்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம் செய்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அப்பகுதி மக்களுக்கு அடிப்படையான தேவைகள் செய்துகொடுக்கப்படும் எனத் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் கிருஷ்ணர் கோயில் குடமுழுக்கு விழா