அரியலூர்: அரியலூரில் வரும் 28ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. வரும் 28ஆம் தேதி மகிமைபுரம், மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 வயது முதல் 35 வயதுடைய, 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்கு என தனித்தனி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
வேலை தேடும் இளைஞர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04329-228641 அல்லது 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழும் அதன் இலக்கியங்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை - ஆளுநர் ரவி