தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி மிக அவசியமானதாகும். மக்களின் கூட்டத்தைத் தவிர்க்க, தற்போது நடக்க வேண்டிய கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு திருமணம் நடைபெற வேண்டுமென்றால் அரசிடம் கட்டுப்பாட்டுடன் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
காதர்பேட்டை மாரியம்மன் கோயிலில் விஜய்- செம்பருத்தி ஆகியோருக்கு இதே நாளில் முன்னதாக திருமணம் நடைபெறும் என நிச்சயிக்கப்பட்டிருந்தது. தற்போது 144 உத்தரவு உள்ள நிலையில், காவல் துறையினர் 20 பேர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
இதனையடுத்து முகக்கவசம் அணிந்துகொண்டு மணமக்கள் திருமணத்தில் பங்கேற்றனர். அதேபோன்று திருமணத்தில் பங்கேற்க வந்த 20 பேரும் கிருமி நாசினியான இயற்கையான முறையில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கொழுந்துகளில் அடைக்கப்பட்ட தண்ணீரில் கை கழுவிய பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: அத்தியாவசிய பொருட்களின் கடைகளை மதியம் 1 மணிக்கு மூட உத்தரவு!