அரியலூர் மாவட்டம் நரியங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனியாருக்குச் சொந்தமான கனிம சுரங்கத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வி.கைகாட்டி என்ற பகுதியில் இவர் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த லாரி மோதிய விபத்தில் இவருக்கு இருகால்களும் முறிந்தன. பின்னர் அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஆலை மற்றும் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில் இறந்தவரின் உறவினர்கள் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதத்திற்கு 5 பேர் இந்தச் சாலையில் விபத்தில் உயிரிழப்பதாகவும், இதுபோன்ற விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதுமட்டுமின்றி, சாலைகளில் அதிவேகமாக செல்லும் லாரி ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் மறியலில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர். பின்னர் காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: விபத்தில் கணவர் பலி; கர்ப்பிணி மனைவியும் 2 குழந்தைகளும் படுகாயம்!