சுவரொட்டிகளுக்கு மவுசு!
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தங்களுடைய சின்னம் - புகைப்படங்கள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளைத் தயார் செய்ய வேட்பாளர்கள் அச்சகங்களில் குவிந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் தங்களுடைய சின்னம், புகைப்படம் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டசேர்க்க முனைப்பு காட்டிவருகின்றனர்.
குவியும் 'ஆர்டர்கள்'
அனைத்து மின் அச்சகங்களிலும் துண்டுப் பிரசுரங்களை கணினியில் வடிவமைத்தல், வடிவமைத்தவற்றை பிரசுரங்களாக அச்சடிப்பது என்று அச்சகங்களில் இரவு பகலாக பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
அச்சகங்களில் வேட்பாளர்கள் குவிந்துள்ளதால், அச்சகப் பணியாளர்கள் கூடுதல் பணியினை மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அதிகப்படியான ஆர்டர்கள் வந்துள்ளதால் பணியாளர்களும் மகிழ்ச்சியுடன் பணியாற்றுகின்றனர்.
வாக்காளப் பெருமக்களே!
கிராமங்களின் சுவர்களில் வேட்பாளர்களின் சின்னம், பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றில், 'எனதருமை வாக்காளப் பெருமக்களே!' உள்ளிட்ட வாசகங்கள் கண்ணைக் கவர தொடங்கியுள்ளன.
பிளக்ஸ் பேனரால் பாதிக்கப்பட்டு பின்நோக்கிச் சென்றுகொண்டிருந்த அச்சகத் தொழிலுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அரியலூர் உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பெட்டிகள் சீரமைப்பு..!