அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் அதே தெருவில் வசிக்கும் இலக்கியா பிரபு என்பவர் உடையார்பாளையம் பேரூராட்சியில் 15ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.
வேட்பாளர் உறவினர்கள் எதிர்ப்பு
இவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் அறிவழகன் செயல்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு அறிவழகனின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கண்டித்துள்ளனர். அதனை ஏற்க மறுத்த அறிவழகன் தனது உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரது உறவினர்கள் இன்று (பிப்ரவரி 21) காலை பெட்ரோல் குண்டு, ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்துள்ளனர்.
வழக்கறிஞர் படுகொலை
அப்போது தெருவில் நின்றுகொண்டிருந்த அறிவழகனை நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தினர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தபோது, அந்தக் கும்பல் பெட்ரோல் குண்டுகளைகக் காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனால் அங்குப் பெரும் பதற்றம் நிலவியது.
பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தொடர்ந்து, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அறிவழகனின் உடலைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு கொண்டுசென்றனர்.
மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலை குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆளுங்கட்சி அராஜகம்; கண்துஞ்சாது கழகப் பணியாற்றிய காவல் துறை