இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக நிறைவேற்ற அலுவல் மொழி சட்டம் 1963ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். அதில், அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி 1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திருச்சி இரயில் நிலையத்தின் முகப்பு வாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு இந்தி திணிப்பைக் கண்டித்து உயிரிழந்தார்.
இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் கீழப்பலூரில் அமைந்துள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், அனைத்து கட்சிகள் சார்பிலும் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: வறுமையில் வாடும் சுபாஷ் சந்திர போஸின் படை வீரர்