அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சூசையப்பா்பட்டிணம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர், திருச்சி, கடலூா், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
வாடிவாசலில் இருந்து சீறிவந்த காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். போட்டியின் போது காயமடைந்த 25 வீரர்களுக்கு மருத்துவக் குழு உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சைக்கிள், கட்டில், ரொக்கப் பரிசு, தங்கம், வெள்ளிக்காசுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்த பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டது. இதேபோல், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பாசோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.