அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எச்.ஐ.வி. & எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த. ரத்னா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி மின்நகர், பெரியதெரு, பேருந்துநிலையம் வழியாகச் சென்று அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைக்கக் கூடாது. நம்மில் ஒருவரைப் போல அவர்களை அரவணைக்க வேண்டும், எய்ட்ஸ் இல்லா உலகம் படைப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும், முழக்கங்கள் செய்தவாறும் பேரணியாகச் சென்றனர். மேலும் பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
இதனையடுத்து பொதுமக்களிடையே எச்.ஐ.வி. & எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திட உங்கள் நிலையை அறிந்துகொள்ளுங்கள் என்ற கருப்பொருளில் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்விற்கான கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்து முதல் கையெழுத்தினை பதிவுசெய்தார்.
தொடர்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதா ? - கிடுக்குப்பிடி போடும் தேர்வாணையம்