அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கரோனா தடுப்பு, கண்காணிப்புப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், "அரியலூர் மாவட்டத்தில் குறைவாக இருந்த கரோனா தொற்று தற்பொழுது கோயம்பேட்டில் வேலைபார்த்துவந்தவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் அதிகரித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு வட்டார அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகளில் அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர்" என்றார்.
பின்னர் அவர், காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக இரண்டு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் வழங்கினார்.
அம்மா உணவகத்திற்கு விலையில்லா உணவு வழங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை நகராட்சி ஆணையர் குமரனிடம் அளித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்னா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.