அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ளது புளியங்குழி கிராம். இங்குள்ள அங்கன்வாடி மையத்தின் ஜன்னல் வழியாக பிறந்த பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஆனால் குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தை அழுவதாக நினைத்து அலட்சியமாக இருந்துள்ளனர்.
இருப்பினும் குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்த நிலையில், அவ்வழியாக வயல்வெளிக்கு சென்ற தொழிலாளிகள் குழந்தையை கண்டு சுத்தமல்லி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் குழந்தையை மீட்டு அவர்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலைவாணனனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடையார்பாளையம் காவல் துறையினர் உதவியுடன் குழந்தையை மீட்டு அரியலூர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, உடையார்பாளையம் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிந்து குழந்தையின் தாயாரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு தொகுதியாக மாற்றப்பட்ட பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகம்