அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு 1998 ஆம் ஆண்டு புதுக்குடி, தண்டலை மேலூர் உள்ளிட்ட 13 கிராமத்தில் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது. இது குறைந்த தொகை என்பதால் விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் இதற்காக 2 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. இதில் விவசாயிகளின் நிலம், அதில் உள்ள மரங்கள், வீடுகள் என ஏக்கருக்கு 12 முதல் 15 லட்சம் தர நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனால் அரசு இந்தத் தொகையை வழங்க முடியாது எனவும், சந்தை விலைக்கு தகுந்தாற்போல் வழங்கப்படும் எனவும் ஆட்சித் தலைவா் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினா். ஆனால் இந்தத் தொகை குறைந்த அளவு உள்ளதாக விவசாயிகள் கூறியதையடுத்து, விவசாயிகள் அதிகாரிகளுடன் மக்கள் நீதிமன்றத்தில் கலந்து பேசி உரிய இழப்பீடுத் தொகை வழங்க அரியலூரில் உள்ள மக்கள் நீதிமன்றத்திற்கு விவசாயிகள் நான்கு மாதங்களாக வழக்கிற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கிற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்க்சி கழக அதிகாரிகள் வராததால், வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் 15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கை தள்ளிவைப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினா். இன்று நடைபெற்ற கூட்டத்திற்கும் அதிகாரிகள் வராததால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.