அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த சண்முகம் - ஆனந்தி தம்பதிக்கு பிறந்தவர் அனிதா. வீட்டின் கடைக்குட்டி செல்லமாக வளர்க்கப்பட்டிருக்கிறாள், அனிதா. சிறுவயதில் இருக்கும்போதே அவரது தாய் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். தாயின் இறப்பு அனிதாவிற்கு மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை விதைத்தது. சுமை தூக்கும் கூலித்தொழிலாளிக்கு மகளாக பிறந்தாலும் அவருடைய இலக்கு வானை நோக்கி இருந்தது. தந்தை, சகோதரர்களின் அரவணைப்பில் வளர்ந்த அனிதா பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்கள் எடுத்து, மருத்துவர் ஆக வழிசெய்யும் வகுப்பை பதினொன்றாம் வகுப்பில் தேர்ந்தெடுந்து படித்துள்ளார்.
அந்த ஏழைத்தந்தை சண்முகத்துக்கு தனது மகள் நன்றாகப் படிப்பாள், அவரது சகோதரர்கள் அவருக்கு வழித்துணையாக இருப்பார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. பத்து நாட்களுக்கு ஒருமுறை அனிதா படிக்கும் பள்ளியில் மட்டும் சென்று பார்த்துவிட்டு வருவார். அந்த வலியை உணர்ந்த அனிதா நினைத்தபடியே பன்னிரெண்டாம் வகுப்பில் நன்கு படித்து, 1176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவர் ஆகும் தகுதியைப் பெற்றார். அந்த வருடம்தான் மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததது. சற்று குழப்பத்தில் இருந்த அனிதாவிற்கு அவரது சகோதரர்களான மணிரத்னமும், சதீஷ்குமாரும் நம்பிக்கையை வளர்த்துள்ளனர்.
'கவலைப் படாதே பாப்பா.... நீ டாக்டர் ஆயிடுவ... நாங்க இருக்கோம்... நீட் தேர்வு தானே எழுதிடலாம்" என உறுதுணையாக இருந்தனர்.
நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை தமிழகத்தில் உருவானது. அதற்கு தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதிக்க முடியாது, அதனால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மாணவர்களுக்கு ஏற்ற நம்பிக்கை வாக்குறுதிகளை கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு, நீட் தேர்வு வருவதைத் தடுக்க முடியவில்லை. அனிதாவின் பெரிய கனவு நீட் தேர்வால் கலைந்து போனது.
பல லட்சம் மாணவர்களின் கனவைத் தடுக்கும் நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்தார். நீட் தேர்வினால் தன்னைப்போன்ற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு என்ற புரிதலே பல்வேறு மாநிலங்களில் இல்லை. மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆதரவாக உத்தரவிட்டு, அனிதாவின் கனவை இருட்டடிப்பு செய்தது. தான் மருத்துவர் ஆக முடியவில்லை என்ற சோகம் தினம் தினம் அனிதாவை வாட்டி வதைத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா மருத்துவர் ஆக முடியாத சோகத்தில், தூக்குக் கயிற்றில் தனது கனவை முடித்துக்கொண்டார்.
அனிதா இறந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அனிதா இறக்கவில்லை விதையாக இருக்கிறார். மருத்துவர் அனிதா இறந்த தினம் தமிழ்நாடே கொந்தளித்தது. மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராடினர். 'அன்று அனிதா மட்டும் இறக்கவில்லை சமூக நீதியும் இறந்துவிட்டதாக' பொது செயற்பாட்டாளர்கள் கருத்துரைத்தனர். குடிசை வீட்டில் பிறந்து ஏழை தந்தைக்கு மகளாக பிறந்ததுதான் குற்றமோ என்று கதறிய நெஞ்சங்கள் பல.
அனிதாவின் தந்தை, 'என் மகள் அனிதா மருத்துவராகியிருந்தால், குழுமூரிலேயே முதல் மருத்துவராகியிருப்பார். எல்லோரும் அவரை மருத்துவர் அனிதா என்று அழைத்திருப்பார்கள்' என்று கண்ணீர் மல்க உரைத்த வார்த்தைகள் அனைவரையும் கலங்கச் செய்தது.
அனிதா பெயரை சொன்னால் கல்நெஞ்சம் கொண்டவர்களும் கரைந்து போவார்கள். இந்த முகம் பலரது கனவுகளுக்கும் உத்வேகமாக இருக்கிறது. இன்று அனிதாவைப் போன்று வேறு எந்த அனிதாக்களும் இறந்துவிடக் கூடாது என்பதற்காக "டாக்டர் அனிதா" என்ற பெயரில் குழுமூரில் நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் 42. 5 லட்சம் ரூபாய் செலவில் 1800 அடி சதுர பரப்பளவில் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த நூலகத்தில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கும் மேல் உள்ளன. இங்கு பல்வேறு கிராமப்பகுதியினருக்கு பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அனிதா நினைவு நூலகத்திறப்பின் போது அவரது அண்ணன் மணிரத்னம் கூறிய வரிகள் நம்மை விட்டு அனிதா நீங்கவில்லை என்பதை அடிக்கடி நினைவூட்டும். அப்போது 'எனது தங்கை இறக்கவில்லை. எங்களுடன்தான் இருக்கிறார். குடும்ப கஷ்டங்களை உணர்ந்து நடந்துகொண்டாள். பயிற்சி வகுப்பிற்கு போறீயா பாப்பா என்று கேட்ட போது, வேணாம்... நிறைய செலவாகும் என்று கூறி எங்களது வாயை அடைத்தாள். எங்களது சிறிய கூட்டிற்குள் ஒரு பறவை இறந்துபோனது மன வேதனையைத் தருகிறது. அந்த பறவை இறக்கவில்லை. எங்கள் நினைவில் வாழ்கிறாள். தாயை இழந்த நாங்கள், அவளைத் தாயாகப் பார்க்க ஆசைப்பட்டோம். அவள் எங்கள் செல்லப்பிள்ளை. எப்பொழுதும் அவரது கடைசிப் பேச்சை சேகரித்து வைத்திருக்கிறேன்.
எங்கள் அனிதா மருத்துவராக பலரது கனவில் வாழ்வாள். அதற்கான முயற்சியைத்தான் செய்துக்கொண்டிருக்கிறோம். எங்களது முயற்சிக்கு அரசும் உதவ முன்வர வேண்டும்" எனக்கூறி முடித்திருப்பார்,அனிதாவின் அண்ணன் மணிரத்னம்.
ஆம். இன்றும் அனிதா எம்.பி.பி.எஸ் பலரது கனவிலும் நினைவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அது காலத்தால் தவிர்க்கமுடியாத ஏழைகளின் உத்வேகம்..!