அரியலூர் அண்ணா சிலை அருகே பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நேற்று பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை ஆளுங்கட்சி கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், "பேரறிஞர் அண்ணாவின் எண்ண ஓட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் அதிமுக. எனவே, அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடத் தகுதியான ஒரே கட்சி அதிமுக மட்டுமே.
திமுக தலைவர் கருணாநிதியிடம் அண்ணாவின் கொள்கைக்கு முரணாக நடக்கிறீர்கள் என்று கேட்ட எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்கியவர் கருணாநிதி.
தேர்தல் என்று வந்துவிட்டால் திமுகவிற்கு ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் பொய் சொல்லும் ஆயுதம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்று ஆராய்ச்சி நடத்தி ஒரு பிஎச்டி பட்டம் பெற்றது போல் திமுக மக்களை ஏமாற்றியது.
வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பயனும் இல்லை என ஆணித்தரமாகக் கூறுகிறேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாமே தவிர நாட்டு மக்களுக்காக எந்த பயனும் தரமுடியாது. நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வருவோம் என திமுக கனவு கண்டது. ஆனால், அதிமுக ஆட்சிதான் தொடர வேண்டும் என எண்ணிய மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தார்கள்" என்றார்.