கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக அந்தந்த மாவட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்படி காவல் துறையினரும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கைது செய்துவருகின்றனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், “செந்துறை பகுதியில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியை தீவிர கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஓய்வுபெற்ற ராணுவத்தினர், தன்னார்வலர்கள் இணைந்து 24 மணி நேர ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர்.
ட்ரோன் மூலமும் அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்பு செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு அளித்து வீட்டிலேயே இருக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், அலுவலர்களுக்கு இடையூறாக செயல்படுதல், காவல் துறையினரைப் பற்றி அவதூறாக சமூகவலைதளங்களில் பகிருதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், கள்ளச்சாரயம் காய்ச்சும் நபர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் எனத் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் இரு பெண்கள் உள்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விருதுநகரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது