அரியலூர் : நெல் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2600 மட்டுமே வாடகை வசூலிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தெரிவித்துள்ளதாவது, “அரியலூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையினை முறைப்படுத்த வேண்டும்.
இந்த நோக்கில் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.2,600 (ரூபாய் இரண்டாயிரத்து அறுநூறு மட்டும்) எனவும், 4WD டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.2,100 (ரூபாய் இரண்டாயிரத்து நூறு மட்டும்) எனவும், டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.1,700 (ரூபாய் ஆயிரத்து ஏழுநூறு மட்டும்) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையின்படி விவசாயிகளுக்கு வழங்கும் ரசீதில் அறுவடை இயந்திரம் ஓடிய நேரம் மற்றும் தொகையினை குறிப்பிட வேண்டும். மேலும், விவசாயிகள் மற்றும் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்கி இவ்வாண்டு அறுவடையினை சிறப்பாக செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட வாடகையினை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்தால் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் துறையினை அணுக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Pongal: ஒரு கிலோ மல்லிகைப் பூ இவ்வளவு விலையா? மலைக்கும் மக்கள்!