அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று(டிச.16) துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைத்தல், புதிய வகுப்பறை கட்டடங்கள் அமைத்தல், கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தா.பழூர் ஒன்றியம், காடுவெட்டான்குறிச்சி ஊராட்சி, சிங்கராயபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தினை திறந்து வைத்து, அங்கன்வாடி மையத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்குச் சுகாதாரமான முறையில் உணவினை சமைத்து வழங்கிட வேண்டும்" என்று சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "காடுவெட்டான்குறிச்சி ஊராட்சியின் கீழ் செயல்படும் நல்லனம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 9.99 இலட்சம் மதிப்பீட்டில் நல்லனம் முதல் காடுவெட்டான்குறிச்சி காலணி வரை தார்ச் சாலை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் பரிமளம், தா.பழூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மகாலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை" - டிடிவி தினகரன்..!