அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருப்பூரில் வேலை பார்த்து வந்த செல்வம், கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பித்ததை அடுத்து திருப்பூரில் இருந்து ஊருக்கு வந்து, அவர் மாமியார் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (மே 19) மாலை தனது இருசக்கர வாகனத்தில் மகன் அன்பு அமுதனுடன் கடாரங்கொண்டான் கிராமத்தில் உள்ள, தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று ஊர் திரும்பிய பொழுது, அதே பகுதியில் மது அருந்தியுள்ளார். பின்னர் வந்து கொண்டிருந்தபோது சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் புதுச்சாவடி என்ற இடத்தில் செல்வத்திற்குப் போதை அதிகமாகி, சுயநினைவை இழந்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் முன்னர் உட்கார்ந்திருந்த அன்பு அமுதன் வழுக்கி, கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மயங்கிய நிலையில், சாலையில் கிடந்து உள்ளார். இதைப் பார்த்த சின்னபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், தனது நண்பர்களுடன் குழந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் தகவலறிந்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இச்சம்பவம் அறிந்த காவல் துறையினர் செல்வத்தை தேடிப் பார்க்கையில், அங்கிருந்து அரை கிலோமீட்டருக்கு அப்பால் முட்புதரில் நினைவிழந்து கிடந்துள்ளார். அதன்பின் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.