பெண்களின் வாழ்நாள் முழுக்க உடனிருக்கும் பிரதானமான நினைவுகளில் முதன்மையானது, அவள் கருவுற்றிருக்கும் காலம். ’எப்ப செல்லம் நீ வெளியில வருவ அம்மா காத்துக்கிட்டு இருக்கேன்’ என அந்த குழந்தையிடம் அவள் ஒருமுறையேனும் கெஞ்சியிருப்பாள். இந்த கெஞ்சல்களுக்கு முற்றுப்புள்ளியாக வருகிறது, நிறைமாத வலி. இந்த பிரசவ வலியை ஆற்றி, சின்னஞ்சிறு குழந்தையை முதன் முதலாக உலகுக்கு அழைத்து வருவதில் முக்கிய பங்காற்றுகின்றனர், மருத்துவர்கள்.
எப்போதும் போல மருத்துவமனையில் இந்த நிகழ்வு அரங்கேறினாலும் கரோனா காலத்தில் வித்தியாசம் இருக்கும் தானே?. கரோனாவின் தாக்கத்தினால் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படுவதில்லை. கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையை மட்டுமே சார்ந்திருக்கிறார்கள். இதனால் சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நிகழும் மருத்துவமனைகளில் 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன.
இதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை. 60 ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவமனையில் 400 படுக்கைகள் உள்ளன. இம்மருத்துவமனை கரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்ல, கருவுற்ற தாய்மாருக்கும் உயிர் காக்கும் மாளிகையாகவே செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 134 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டனர். இதேபோல் மார்ச் மாதம் 139 குழந்தைகளும், ஏப்ரல் மாதம் 178 குழந்தைகளும் பிறந்துள்ள நிலையில் கரோனா நெருக்கடி இப்பிரசவங்களை இரட்டிப்பாக மாற்றியுள்ளது.
கரோனா நெருக்கடியில் பிரசவங்கள்
மே மாதத்தில் 108 பேருக்கு சுகப்பிரசவம், 188 அறுவை சிகிச்சை என 296 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 30 பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த பிரசவத்திற்கு பின்னர் தாய், சேய் இருவருமே நலமாகவுள்ளனர். கரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளை அனுமதிக்கப்படுவதில்லை. மருத்துவமனைகளிலும் 70 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 35 மருத்துவர்கள் மட்டுமே பணியிலிருக்கின்றனர்.
தகுந்த இடைவெளி, உரிய மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கர்ப்பிணிகளை கவனமாக பரிசோதனை செய்துள்ளனர், அரசு மருத்துவர்கள். தனியார் மருத்துவமனையில் தொடர்ச்சியான ஆலோசனைகள், மற்றும் சோதனைகளை செய்து வந்த கர்ப்பிணிகளுக்கும் கூட அரசு மருத்துவமனையின் சிகிச்சை முறை பிரமிப்பை உண்டாக்கியுள்ளது.
இது போலவே, அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மருத்துவமனைகளிலும் பிரசவம் இருமடங்கு ஆனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் பற்றாக்குறையுடன் இருக்கும்போதிலும், கர்ப்பிணிகளுக்கென தனி சிரத்தை எடுத்து மருத்துவர்கள் செயலாற்றுவது பாராட்டத்தக்கது.
இதையும் படிங்க: வெட்டி வேரில் முகக்கவசம்... கவனம் ஈர்க்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்!