தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 800 நூலகங்கள் உள்ளன. மாவட்ட தலைநகரங்களில் ஒரு மாவட்ட மைய நூலகமும், அதன் கீழ் முழு நேர நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என நூற்றுக்கணக்கில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
![மாவட்ட மைய நூலகம் திறப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ari-03-library-open-vis-scr-7206094_01092020100541_0109f_00380_349.jpg)
இந்நிலையில், கரோனா பரவலைத் தொடர்ந்து, நாடு முழுதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த மே 31ஆம் தேதி வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு, இன்று முதல் நான்காம் கட்டமாக அமலுக்கு வந்தது. இதில், கரோனா பரவலைத் தடுப்பதற்காக மூடப்பட்ட நூலகங்கள் இன்று (செப்.,1) திறக்கப்படுகின்றன.
![வெப்பநிலை பரிசோதனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ari-03-library-open-vis-scr-7206094_01092020100541_0109f_00380_182.jpg)
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை அடுத்து அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மைய நூலகம் திறக்கப்பட்டது. நூலகத்திற்கு வரும் வாசகர்களின் வெப்பநிலையைப் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் 15 ஆயிரத்து 418 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக, இந்நூலகத்தைப் பயன்படுத்தி 70 மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் செய்தனர். நூலகத்தில் நாளிதழ்களும், பருவ இதழ்களும் படிப்பதற்கு அனுமதி இல்லை. நூலகம் திறக்கப்பட்டதால் வாசகர்களைவிட போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
இதையும் படிங்க:கைவிரித்த அரசாங்கம் - வாசகர்களால் புத்துயிர் பெற்ற கால் நூற்றாண்டு கடந்த நூலகம்!