அரியலூர் மாவட்டம் செந்துறையில் இரண்டு மாட்டு வண்டிகள் மீது சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரி மோதியதில் இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதனைக் கண்டித்து உரிய இழப்பீட்டுத்தொகை தரக்கோரி செந்துறை காலணி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பு தொடர் கதையாக இருந்துவருகிறது. எனவே, விபத்துகளை தடுக்க லாரிகளுக்கென தனி சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்படாத பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முறையிட்டனர். இதனிடையே, மக்களின் கோரிக்கைகள் விரைவில் பரீசிலிக்கப்படும் என காவல்துறையினர் வாக்குறுதி அளித்த பின்னரே செந்துறை கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.