அரியலூர் அருகேயுள்ள கலியுக வரதராஜப் பெருமாள் கோயில், ’ஏழைகளின் திருப்பதி’ என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு அரியலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் வந்து பெருமாளை தரிசிப்பது வழக்கம்.
இங்கு, பக்தர்கள் தங்களது வயல்களில் விளைந்த நெல் மூட்டைகள், மிளகாய், சோளம், பருத்தி, தேங்காய், உளுந்து ஆகியவை மட்டுமில்லாமல், கால்நடைகளையும் அழைத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
கரோனா பரவல் காரணமாக, ஒரு மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் கோயிலின் உள்ளே சென்று தரிசிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், திடீரென மக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்தடை குறித்து கேள்விப்படாத பொதுமக்கள் ஏராளமானோர், காலை முதலே காணிக்கைப் பொருள்களை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் காவல் துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து பக்தர்களை உள்ளே வராமல் தடுத்து நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதனால் தாங்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை செலுத்த முடியாமல் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், தங்களது காணிக்கைப் பொருள்களையாவது வாங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.