கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினால், அரியலூரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இந்த ஊரடங்கினால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த கோடையை ஒட்டி கிர்ணி பழம், தர்பூசணி ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளவர்கள், நுங்கு வியாபாரிகள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளனர்.
இது குறித்து கிர்ணி பழம் விவசாயி ஒருவர் கூறுகையில், "சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இந்தாண்டு கிர்ணி பயிரிட்டிருந்தோம். ஒவ்வொரு ஆண்டும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பழங்களை வாங்க வருவார்கள். ஆனால் தற்போது, ஊரடங்கால் வியாபாரிகள் யாரும் வரவில்லை.
விளைச்சலை விற்பனை செய்யமுடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். 5 கிலோ மலிவான விலையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்தோம்.
சுமார் 4 லட்சம் ரூபாயை கிர்ணி சாகுபடிக்காக செலவுசெய்துள்ளோம். இந்தப் பணத்தை எடுக்க தற்போது ஊர் ஊராகச் சென்று விற்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்தக் கரோனா சூழலில் அரசே நேரடியாக பழங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து நுகர்வோர்களிடம் விற்பனை செய்தால் எங்களின் சுமை குறைவதோடு எங்களின் வாழ்வாதரமும் பாதுகாக்கப்படும்" என்றார்.
நுங்கு வியாபாரி இது குறித்து கூறுகையில், "ஊரடங்கு உத்தரவின் காரணமாக நுங்கை மரத்தில் ஏறி அறுப்பதற்கும் அதனை விற்பதற்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. மற்ற பொருள்கள் எல்லாம் ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஆனால், நுங்கு கோடைகாலத்தில் அதுவும் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும்.
தற்போது, குறிப்பிட்ட நேரம் மட்டுமே அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்ய வேண்டும் என அரசு கூறியுள்ளது. அந்த நேரத்துக்குள் விற்பனைசெய்வது இயலாத காரியம். எனவே, அரசு எங்களைப் போன்ற வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட கூடுதல் நேரம் அனுமதிக்க வேண்டும்" என்றார்.
கோடைகாலத்தில் மக்கள் கிர்ணி, தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை வாங்கி உண்ண வேண்டும். அதன்மூலம் மக்களின் உடல்நலன் பேணப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வும் காப்பாற்றப்படும்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு வீடியோ காலில் பயிற்சி: தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசுப் பள்ளி