உலகை உலுக்கும் கரோனா காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்து அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் அரசு மருத்துவர்கள், அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில் மருத்துவர்கள், கோயம்பேட்டிலிருந்து வந்தவர்களினால் அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானது. அதனைத் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குணமடைந்து செல்பவர்கள் வீட்டில் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை கவனிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவ, வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செந்துறை மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை சரிசெய்ய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
அதையடுத்து பேசிய ராஜேந்திரன், மருத்துவமனைகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரியலூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்