அரியலூர்: தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சோழமாதேவி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பேசியதாவது, “தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் தொலை தூரத்தில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு கண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதே முகாமின் நோக்கமாகும்.
அதனடிப்படையில் இன்றைய தினம் தா.பழூர் ஒன்றியம், சோழமாதேவி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 269 மனுக்கள் பெறப்பட்டு, 213 மனுக்கள் ஏற்கப்பட்டும், 55 மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டும், 1 மனு விசாரணையில் உள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 129 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
மேலும் இம்முகாமில், 221 பயனாளிகளுக்கு ரூ.72,81,130 மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு ஏற்கனவே புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும் முக்கியமான திட்டமாகும்.
பெண்கள் கல்வி கற்றால் குடும்பம் முன்னேறும். எனவே, பெண்களுக்கு கல்வி மிகவும் முக்கியமாகும். இதனை உணர்ந்து தமிழக முதல்வர் புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். இதனை அனைத்து மாணவிகளும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே, புதுமைப் பெண் திட்டத்தில் முதற்கட்டமாக 886 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டு, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டத் திட்டத்தின்கீழ் 445 மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களின் உயர்கல்வி கனவு நிறைவேறியுள்ளது. பெண்கள் கல்வி கற்க தாய்மார்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதேபோன்று மகளிர் முன்னேற்றத்திற்காக மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுய தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறும் வகையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. மேலும், சுய தொழில் வேலை வாய்ப்பிற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாய நலனுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், அரசின் பல்வேறு திட்டங்களின் உதவித் தொகைகள் பயனாளிகளை சென்று சேரும் வகையில் வங்கி கணக்குடன் தங்களது ஆதார் எண்ணை பயனாளிகள் முறையாக இணைக்க வேண்டும். எனவே, தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்” என்றார்.
முன்னதாக, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இம்முகாமில், தனித்துணை ஆட்சியர் குமார், மகளிர் திட்ட இயக்குநர் முருகண்ணன், கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் துரை, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலெட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாப்பா உத்திரானம் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உரிமையுடன் சேலை கேட்ட பாட்டி: நெகிழ வைத்த கலெக்டரின் அன்பு!