அரியலூர் அருகே ராமலிங்கபுரம், ரசலாபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இவற்றினிடையே அமைந்துள்ளது சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் கார் லைன் ரயில்வே பாதை.
இப்பாதை வழியாகத்தான் திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் சென்று வருகின்றன. எனவே ரயில் பாதையின் குறுக்கே லெவல் கிராசிங்கும் அமைந்துள்ளது.
இந்த லெவல் கிராசிங் வழியாகத்தான் மேத்தால், சில்லகுடி, இலுப்பகுடி உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு பேருந்துகள், சிற்றுந்துகள், குறிப்பாக 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்றுவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த லெவல் கிராசிங்கை அகற்றி சுரங்க நடைபாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மாற்றுப் பாதையானது அருகிலுள்ள குளக்கரையில் அமைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், அரியலூரில் பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி அதில் பாம்புகளும் இருந்ததால், அப்பாதையைப் பயன்படுத்த முடியாமல் போனது. இதனிடையே, வேறுவழியின்றி அருகில் உள்ள ரயில்வே லைனில் நடந்து செல்வதற்குப் பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர்.
மேலும், அரசுப் பேருந்து சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்துத் தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மாற்றுப்பாதை அமைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர், ரயில்வே அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மாநில அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி உடனடியாக மாற்றுப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.