அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆய்வுமேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சம்பா சாகுபடியில் நெல் பயிரில் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.
இது நெல்லின் நடுப்பத்தில் உள்ள குருத்தைச் சாப்பிடுவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே இதனைத் தடுக்கும்விதமாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் சம்பா நெல் பயிரில் உள்ள வயல்வெளியில் விவசாயிகளுடன் இணைந்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மேலும் ஒவ்வொரு கட்டமாக ஆய்வில் ஈடுபட்டு அவர்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறி ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்“ என உத்தரவிட்டார்
இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா வேளாண்மை இயக்குநர் உதவி, இயக்குநர் உள்ளிட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.