அரியலூர் மாவட்டம், தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதனை, அரியலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் விஜயலட்சுமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய விஜயலட்சுமி, இயந்திரங்களைப் பாதுகாப்பது, வாக்கு எண்ணும் நாளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்ததாகவும், அதற்கான வசதிகளை விரைந்து முடிக்குமாறும் அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சிதம்பரம் தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பெண்கள் மட்டும் பணியாற்றக்கூடிய ஐந்து வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.