இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலாவதாக ஒரே டி20 ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மது பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் தொடக்க வீரர்களாக பாகிஸ்தானின் ஃபக்கர் ஸமான் - பாபர் அஸாம் இணை களமிறங்கியது. ஃபக்கர் ஸமான் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இளம் வீரர் இமாம் உல் ஹக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த பாபர் அஸாம் - ஹாரிஸ் சோஹல் இணை இங்கிலாந்து பந்துவீச்சைப் பதம் பார்த்தது.
மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த இணை அதிரடியாக ஆடி 103 ரன்கள் சேர்த்தது. டி20 போட்டிகளில் தனது முதல் அரை சதத்தைதைப் பதிவு செய்த ஹாரிஸ் சோஹல் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து பாபர் அஸாம் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களில் இமாத் வாசிம் 18 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.
பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் 9 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த ரூட்- வின்ஸ் இணை சிறப்பாக ஆடியது.
வின்ஸ் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரூட் 47 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் மோர்கன் அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி 12 பந்துகளில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 19ஆவது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது பந்தில் மோர்கன் சிக்சர் விளாசி இங்கிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 எடுத்து பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த மோர்கன் ஆட்டநாயகன் விருதைத் தட்டி சென்றார்.