டெல்லி: பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகள் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டியாகும். இப்போட்டிகளில், இதுவரை இல்லாத அளவில் 54 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இவர்களுக்கு தமிழ்நாட்டு பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு கேப்டனாகத் தலைமை தாங்குகிறார். இவர் தலைமையில் தேசியக்கொடியை ஏந்தி, இந்திய வீரர்கள் இன்று அணிவகுத்துச் செல்ல உள்ளனர். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, இந்தப் போட்டிகள், நடந்துமுடிந்த ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பார்வையாளர்களின்றி நடைபெறுகிறது.
வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்
இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். முன்னதாக, பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ஆடவர் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
ராணி ராம்பால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் ஊக்குவிக்கும் சக்தி கொண்டவர்கள். உங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்பட முடியும். மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.
மன்பிரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரரும் உறுதியுடனும், கடின உழைப்புடனும் விளையாட வேண்டும். ஒருவர் எவ்வளவு சாதிக்க முடியும், என்பதற்கு ஒரு உதாரணமாக நீங்கள் இருப்பீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்துவீர்கள்
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில், "டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு எனது வாழ்த்துகளையும், ஆதரவையும் அனுப்புகிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன். நீங்கள் நாட்டையும், மக்களையும் பெருமைப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக் - டோக்கியோ சென்ற இந்திய அணி!