எனோஷிமா (ஜப்பான்): ஒலிம்பிக் தொடரின் பாய்மர படகுப்போட்டி (SAILING) முதல் நாள் போட்டிகள் இன்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் பெண்கள் லேசர் ரேடியல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன், ஆண்கள் லேசர் பிரிவில் விஷ்ணு சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல் நாளில் முன்னேற்றம்
பெண்கள் லேசர் ரேடியல் பிரிவில் நேத்ரா, இரண்டு ரேஸ்களில் மொத்தம் 49 புள்ளிகளை பெற்று 27ஆவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல் ரேஸில் 33ஆவது இடத்தையும், இரண்டாவது ரேஸில் 16ஆவது இடத்தையும் நேத்ரா பிடித்திருந்தார்.
ஆண்கள் லேசர் பிரிவின் இரண்டாவது ரேஸ் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதில், விஷ்ணு சரவணன் முதல் ரேஸில் 14ஆவது இடத்தை பிடித்ததால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் முறை
பாய்மர படகுப்போட்டியில் ஒவ்வொரு பிரிவின் தகுதிச்சுற்றில் இரண்டு ரேஸ்கள் நடைபெறும். இதில் இரண்டு ரேஸ்களிலும் போட்டியாளர்கள் பெறும் இடங்களை வைத்து அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். உதாரணத்திற்கு முதலிடம் பிடிப்பவருக்கு ஒரு புள்ளியும், இரண்டாம் இடத்தை பிடிப்பவருக்கு இரண்டு புள்ளியும் வழங்கப்படும்.
இந்நிலையில் ஆண்கள், பெண்கள் இருவருக்குமான பதக்க போட்டி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும். இந்தப் போட்டியில், புள்ளிகள் இரட்டிப்பாக வழங்கப்படும். உதாரணத்திற்கு முதலிடம் பிடிப்பவருக்கு இரண்டு புள்ளியும், இரண்டாம் இடத்தை பிடிப்பவருக்கு நான்கு புள்ளிகளும் வழங்கப்படும். இதில், குறைவான புள்ளிகளை பெற்றவர்கள் பதக்கங்களை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.