ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கிய 32ஆவது ஒலிம்பிக் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 206 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர். இறுதி நாளான இன்று மட்டும் 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
தற்போது, போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்கப் பட்டியலில் 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணி, 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
அடுத்தபடியாக, 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2ஆவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என ஏழு பதக்கங்களுடன் இந்தியா 48ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 16 நாள்களாக மக்களை விறுவிறுப்பாக வைத்திருந்த ஒலிம்பிக் திருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இன்று (ஆக.08) நிறைவடைந்தது.
நிறைவு விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளும் இந்திய அணியை மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா தேசியக் கொடியை சுமந்து சென்று வழிநடத்துகிறார். 2024 ஒலிம்பிக், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கின் வெற்றி உலகிற்கு நம்பிக்கை தரும் - தாமஸ் பாக்