2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே 39, 38, 27 தங்கங்களுடன் முதல் மூன்று இடங்களை பிடித்தது. இந்தியா 48ஆவது இடத்தோடு தொடரை நிறைவு செய்திருந்தது.
ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கில் கண்ணீர் தருணங்கள், ஆச்சர்ய நிகழ்வுகள் பல நடந்தேறின. அந்த வகையில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் வேறொரு இடத்தில் தொலைந்து போன ஜமைக்கா வீரர் ஒருவருக்கு, பெண் ஒருவர் பணம் கொடுத்து அவரை சரியான நேரத்தில் போட்டிக்கு அனுப்பி வைத்த கதைதான் சமீபத்திய ஹாட் டாபிக்.
பாட்டு கேட்டதால் பாதை தவறிய வீரர்
அந்த வீரர் வேறு யாரும் இல்லை, ஆடவர் 110மீ தடை ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஹான்ஸ்லே பார்ச்மென்ட் தான். போட்டி நடைபெற்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று தடகள மைதானத்திற்குச் செல்லும் பேருந்திற்கு பதிலாக நீச்சல் அரங்கிற்கு செல்லும் பேருந்தில் ஹான்ஸ்லே தவறாக ஏறியிருக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
பேருந்தில் ஏறிய உடன் பாட்டு கேட்டே சென்றதால் பேருந்து செல்லும் பாதையை கவனிக்காமல் இருந்துள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகே, பேருந்து வேறு பாதையில் செல்வதை பார்த்துள்ளார்.
மீட்பராக வந்த பெண்
உடனடியாக, பேருந்தை நிறுத்தி போட்டி அலுவலர்களை தொடர்பு கொண்டுள்ளார். வேறு பேருந்தில் ஏறி விரைவாக தடகள மைதானத்திற்கு வரும்படி அவர்கள் அறிவுறித்தியுள்ளனர். ஆனால், ஹான்ஸ்லேவாவோ என்ன செய்வது? ஏது செய்வது? என்று குழப்பத்தில் இருந்துள்ளார்.
வார்ம்-அப் பயிற்சி நேரத்தில் சரியாக செல்லவில்லை என்றால் போட்டி கைத்தவறிவிடுமே என்று நடுவீதியில் நின்று கொண்டிருந்தவரை, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பணியாற்றி வந்த திரிஜனா ஸ்டோஜ்கோவிக் என்பவர் பார்த்துள்ளார்.
ஹான்ஸ்லே திக்குதெரியாமல் நிற்கும் கதையைக் கேட்ட திரிஜனா, பேருந்துக்கு காசு கொடுத்து, அவரை சரியான பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார். அதனால், சரியான நேரத்தில் மைதானத்தை அடைந்து தங்கப்பதக்கத்தையும் வென்றது மட்டுமில்லாமல், பந்தைய தூரத்தை 13.04 வினாடிகளில் கடந்து சீசன் பெஸ்டையும் பெற்றார்.
தங்கப்பதக்கம் உன்னால்...
மூன்று நாள்கள் கழித்து, அவர் திக்குத் தெரியாமல் நின்று கொண்டிருந்த அதே வீதியில் போய் நின்று திரிஜனாவை தேடி கண்டுப்பிடித்துள்ளார்.
அன்று நீங்கள் இல்லை என்றால் இந்த தங்கப்பதக்கத்தை என்னால் வென்றிருக்க முடியாது என கூறி திரிஜனாவிடம் அந்த பதக்கத்தை காண்பித்துள்ளார் ஹான்ஸ்லே. இந்த தருணத்தை செல்ஃபி எடுத்து, இருவரும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
திரிஜனாவில் இந்த உதவியை போற்றும் வகையில் ஜமைக்கா அரசு, அவருக்கு 'மீட்பர்' என்று பட்டமளித்து, ஜமைக்காவுக்கு சுற்றுலா வரும்படி அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. ஹான்ஸ்லேவும், திரிஜனாவும் தற்போது நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். இருவரின் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: ’இப்போ வெண்கலம் ஓகே, ஆனா நெக்ஸ்ட் தங்கம்தான்...’ - லவ்லினா!