வெற்றி மங்கை மீராபாயை பாராட்டணுமா... போஸ்ட் ஆபிஸ் வாங்க - வேலூரில் புதுமுயற்சி! - வேலூர்
டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பாராட்டு தெரிவிக்க வேலூர் தலைமை தபால் நிலையத்தில் பிரத்யேக இ-போஸ்ட் கவுண்டர் தொடங்கிவைக்கப்பட்டு, மூன்று நாள்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்: நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று பெண்கள் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு. மணிப்பூரைச் சேர்ந்த இவர் டோக்கியோவில் இருந்து இந்தியா திரும்பியதில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவை பாராட்டுவதற்காக பிரத்யேக இ-போஸ்ட் கவுன்ட்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும், இங்கு பத்து ரூபாய் செலுத்தி இ-போஸ்ட் மூலமாக மீராபாய்க்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.
கவுன்ட்டரை தொடங்கிய தேசிய வீரர்
இதுகுறித்து, வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கோமல் குமார் கூறுகையில், "இன்று (ஜூலை 29) தொடங்கி வைக்கப்பட்ட இந்த பிரத்யேக கவுன்ட்டர் மூன்று நாட்களுக்கு செயல்படும். வேலூர் தலைமை தபால் நிலையத்தில் தபால்காரராக பணியாற்றிவரும் லத்தேரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இதனை தொடங்கி வைத்தார்.
இவர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் இங்கு தபால்காரராக பணிக்கு சேர்ந்தவர், தமிழ்ச்செல்வன்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாயும் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளதால், தமிழ்ச்செல்வனை வைத்து இந்த கவுன்ட்டரை தொடங்கி வைத்தோம். இந்த பிரத்யேக கவுன்ட்டரின் மூலம் பொதுமக்களுக்கு விளையாட்டு மற்றும் பெண்கள் அதிகாரம் (Women Empowerment) குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.
மீராபாய்க்கு நேரடியாக செல்லும் வாழ்த்துகள்
மேலும், இ-போஸ்ட் எனப்படும் இணையதள தபால் சேவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் இதனை செய்துவருகிறோம். இந்த இ - போஸ்ட் மூலம் ஒருவர் தனது வாழ்த்துகளை பத்து ரூபாய் கட்டணமாக செலுத்தி அனுப்பினால், அந்த வாழ்த்து செய்தி மணிப்பூரில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்லும். அங்கு வாழ்த்து செய்தியை பிரிண்ட் செய்து பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் வீட்டில் தபால்காரர்கள் ஒப்படைப்பார்கள்.
வேலூர் கோட்டத்தில் உள்ள ஒரு தலைமை தபால் அலுவலகம், 46 துணை அலுவலகங்கள், 104 கிளை அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்த சேவை மூன்று நாள்களுக்கு செயல்படும். தற்போதுவரை 260 தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிறுவர்கள் பலரும் ஆர்வத்துடன் தபால் அனுப்பி வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: மீராபாய் சானு: 2016 தோல்வி முதல் 2021 வெள்ளிவரை - 'நெவர் எவர் கிவ் அப்' கதை