சேலம்: டோக்கியோ 2020 ஒலிம்பிக் (SUMMER GAMES) தொடர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தத் தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேசியக்கொடியை ஏந்திச் செல்ல இருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பு
இதனிடையே, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் பரிசாக அளிக்கப்படும் என்று ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது போல, வரவிருக்கும் பாரா ஒலிம்பிக்கிலும் சிறப்பாக செயல்படும் என்று நாடே எதிர்பார்க்கிறது. இந்நிலையில், 54 பேர் கொண்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் குழுவுடனும், அவர்களின் குடும்பத்தாரிடமும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (ஆக. 17) கலந்துரையாடி ஊக்கமளித்தார்.
பிரதமருடன் கலந்துரையாடல்
பெங்களூருவில் பயிற்சி பெற்று வரும் தடகள வீரர் தங்கவேலு மாரியப்பனுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். மாரியப்பனின் தாயார் சரோஜா, மாரியப்பனின் சகோதரர்கள் சொந்த ஊரான டேனிஷ்பேட்டையிலிருந்து பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி மாரியப்பனிடம் உரையாடும் போது, "உங்கள் ஊக்கம் மேலும் பல இளைஞர்களை விளையாட்டுகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் வெல்ல உற்சாகம் தரும்" எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து பேசிய மாரியப்பன், "தொடர்ந்து தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பிரதமரின் ஊக்கமும், ஒன்றிய அரசின் உதவியோடும் மீண்டும் தங்கப்பதக்கம் வெல்வேன்" என்று உறுதியளித்தார்.
தமிழில் வணக்கம் கூறிய மோடி
அதன்பின், மாரியப்பன் குடும்பத்தாரிடம் தமிழில் வணக்கம் கூறி பேசத் தொடங்கினார். மோடி, மாரியப்பனின் தாயாரிடம் மாரியப்பன் குறித்து விசாரித்தார்.
அதற்குப் பதிலளித்த அவரின் தாயார் சரோஜா, "சிறு வயதில் இருந்தே கோழி சூப் போன்ற உடலுக்கு திடமான உணவுகளையும், அவரின் விளையாட்டுகளுக்கான ஊக்கத்தையும் அளித்தேன். இந்த முறையும் அவர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன்" என்றார்.
இந்த கலந்துரையாடலுக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பனின் தாயார், பிரதமருடன் உரையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும் பாரா ஒலிம்பிக் தொடரில் மாரியப்பன் மீண்டும் தங்கம் வென்று பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பார் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: Tokyo Paralympics: இந்திய அணிக்கு வாழ்த்தி வழியனுப்பும் விழா!