டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஏழாம் நாளான இன்று (ஆகஸ்ட் 31) துப்பாக்கிச் சுடுதல், தடகளப் போட்டிகள், வில்வித்தைப் போட்டிகள், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா ஆட உள்ளது. பதக்கம் வெல்ல அதிகம் வாய்ப்புள்ள போட்டியாக, உயரம் தாண்டுதல் பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பில் உயரம் தாண்டுதல்
இப்போட்டியில், கடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்க இருக்கிறார். மேலும், இந்தியா சார்பில் சரத் குமார், வருண் சிங் பாட்டி (varun singh bhati) ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். மாரியப்பன் மட்டுமில்லாமல் இந்தியாவின் மற்ற இரண்டு வீரர்களும் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புள்ளது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியா சார்பாக தேசியக்கொடியை ஏந்தி செல்லும் மரியாதை மாரியப்பனுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று ஏற்பட்டவருடன் மாரியப்பன் தொடர்பில் இருந்த காரணத்தால் சில நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.
வருமா இரண்டாவது தங்கம்?
இதனால், அவர் போட்டியில் பங்கெடுப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் கலந்துகொள்வார் என அறிவிப்பு வெளியானது. இதனால், இரண்டு முறை தொடர்ந்து தங்கம் வெல்லும் முனைப்பில் மாரியப்பன் இன்றையப் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறார்.
கடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கத்தை மாரியப்பன் பெற்றிருந்தார். இம்முறையும் அவர் தங்கம் வெல்லும்பட்சத்தில், தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கத்தைப் பெறும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவரைச் சாரும்.
காயத்திலிருந்து மீண்டபின்
2018ஆம் ஆண்டில் மாரியப்பன், வலது கால் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். பின்னர், காயத்திலிருந்து மீண்ட மாரியப்பன், ஆசிய பாரா விளையாட்டுகளிலும் (2018), உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் (2019) வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
மாரியப்பனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, மது போதையில் இருந்த ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் அவரது வலது காலின் முழங்காலுக்கு கீழ் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகி அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி வெட்டியெடுக்கப்பட்டது.
தற்போது 26 வயதான மாரியப்பன் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடியவராக இருந்துவருகிறார். ஆதலால், இன்றையப் போட்டியை (ஆகஸ்ட் 31 மாலை 3.55 மணியளவில்) சேலம், தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார் - தாயார் சரோஜா நம்பிக்கை