ஸ்ரீ கங்காநகர் (ராஜஸ்தான்): மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்தியா, 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என எட்டு பதக்கங்களை வென்று 28ஆவது இடத்தில் உள்ளது.
முதல் தங்கத்திற்கு முக்கியமானவர்
இதில், நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம் வெல்லும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
அவர் துப்பாக்கி கையிலெடுப்பதற்கு அவரது தந்தை பிரவின் லெகாரா காரணமானவர். இதை அவனி வெற்றிக்குப் பிறகான தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா தங்கம் வெல்ல முதன்மைக் காரணமாக இருந்த அவனி லெகாராவின் தந்தையை நமது 'ஈடிவி பாரத்' ஊடகம் பிரத்யேகமாகப் பேட்டி கண்டது.
7-8 மணிநேர பயிற்சி
அவர் கூறியதாவது, "அவனி இந்தப் பதக்கத்திற்காகக் கடினமாக உழைத்துள்ளார். ஏறத்தாழ ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணிநேரம் அவர் பயிற்சி மேற்கொள்வார். அந்தக் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகுதான் நாயகர்களாகப் பார்க்கப்பட்டாலும், பாரா ஒலிம்பிக்கின் அனைத்து வீரர்களுமே இந்த உலகில் நிஜமான நாயகர்கள்தாம்" என்றார்.
தங்கம் வென்ற அவினி லெகாராவிற்குப் பல தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு அவருக்கு மூன்று கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: உலகின் உச்சியில் இருக்கிறேன் - உச்ச மகிழ்வில் தங்க மங்கை