டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆடவர் குத்துச்சண்டை ஹெவிவெய்ட் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதன் ஒரு போட்டியில், மொராக்கோ நாட்டின் யூனஸ் பால்லா, நியூசிலாந்து நாட்டின் டேவிட் லயிக்கா ஆகியோர் மோதினர்.
கன்னத்தில் கடி... ஆட்டத்தை முடி
அப்போட்டியின், மூன்றாவது சுற்றின்போது யூனஸ் எதிராளி டேவிட்டை கடிக்க முயன்றுள்ளார். போட்டி நடுவர் இதை கவனிக்காத நிலையில், டிவி நடுவரால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த போட்டியில் டேவிட்தான் வெற்றி பெற்றார் என்பதால் பால்லாவுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.
தப்பித்தேன்... பிழைத்தேன்...
இதுகுறித்து, டேவிட் கூறுகையில்," நல்வாய்ப்பாக, அவர் பல் கவசம் அணிந்திருந்ததால் நான் தப்பித்தேன். என்னுடைய கன்னத்தைக் கடிக்க முயன்ற அவருக்கு, என்னுடைய வியர்வைதான் கிடைத்திருக்கும்" என யூன்ஸின் செயலை நகைத்துள்ளார்.
டைசன் சம்பவம்
1997இல் மைக் டைசன், எவாண்டர் ஹோலிஃபீல்ட் என்பவரை இரண்டு முறை காதை கடித்த சம்பவம், நேற்றைய சம்பவத்தை நினைவுப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: பாண்டியாவுக்கு கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணி; டி20 போட்டி ஒத்திவைப்பு!