டோக்கியோ: நடப்பு உலக சாம்பியனும், கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால், அரையிறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ-யிங் சிந்துவை வீழ்த்தி, தங்கப் பதக்கக் கனவை சிந்துவிடமிருந்து பறித்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று (ஆக.1) நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனையை தோற்கடித்து இந்தியாவிற்கான இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்தார், பி.வி.சிந்து.
இந்த வெற்றி மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் முதல் இந்திய பெண், இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
இதற்கு முன், 2008 பெய்ஜிஙில் வெண்கலமும், 2012 லண்டனில் வெள்ளியும் பெற்ற விஜேந்திர் சிங்தான் (மல்யுத்தம்) இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்ற முதல் பெருமையை பெற்றிருந்தார்.
ஆர்ப்பரித்து வெளிப்படுத்தினேன்
நேற்றைய வெற்றிக்கு பிறகு பி.வி.சிந்து கூறுகையில், "போட்டி முடிந்து ஐந்தாறு விநாடி நான் திகைத்து நின்றுவிட்டேன். பயிற்சியாளர்கள் கண்களில் கண்ணீர். அவரை கட்டியணைத்து நன்றி கூறினேன். பெரிய தருணமது. அந்தத் தருணத்தில் என்னுடைய மொத்த உணர்ச்சிகளையும் ஆர்ப்பரித்து வெளிப்படுத்தினேன்.
அரையிறுதியில் தோற்றது எனக்கு கவலையளித்தது. நான் அழுதுக் கொண்டிருந்த போது அவர் கூறியது ஒன்றுதான், 'நான்காவது இடத்திற்கும் வெண்கலப் பதக்கத்திற்கும் நிறைய வித்தியாசமுள்ளது' என்றார்.
அது என்னை மிகவும் பாதித்தது. அதனால், 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் என நினைத்துதான் நேற்றைய போட்டியை சந்தித்தேன்" என்றார்.
இதையும் படிங்க: நாட்டிற்காக பதக்கம் வென்றது மட்டற்ற மகிழ்ச்சி - சிந்துவின் தந்தை நெகிழ்ச்சி