டோக்கியோ: ஒலிம்பிக் கோல்ஃப் விளையாட்டின் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில், இந்திய வீராங்கனை அதிதி அசோக் விளையாடினார்.
60 வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், அதிதி அசோக் நேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துப் போட்டியை நிறைவுசெய்திருந்தார். அதையடுத்து இன்று நடந்த இறுதிச்சுற்றில், நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட அதிதி நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் முதல் 5 இடங்களுக்குள் நிறைவு செய்த பெருமையைப் பெற்றாலும் கூட, ஒலிம்பிக்கில் 4ஆவது இடத்தை பிடித்திருப்பது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார் அதிதி.
மேலும் பேசிய அவர்,’’வேறு தொடர்களில் இதே இடத்தைப் பிடித்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். ஆனால் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தை பிடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை.
நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தேன். சில இடங்களில் பல வாய்ப்புகளை எடுக்க தவறிவிட்டேன். நான் பதக்கம் வெல்ல விரும்பினேன். இருந்தபோதும் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்”என்றார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் கோல்ஃப் போட்டி: அதிதி அசோக் அதிர்ச்சித் தோல்வி