டெல்லி: நடந்து முடிந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஆடவர் ஹாக்கி அணி, 41ஆண்டுகளுக்கு பின்னர் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இதன்பின்னர், நாடு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டனான மன்பிரீத் சிங் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கடுமையான 15 மாதம்
அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, "பெங்களூரு பயிற்சி முகாமில் கடந்த 15 மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். குடும்பத்தைக் கூட சந்திக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டோம்.
ஒட்டுமொத்த அணியும் கடுமையாக உழைத்து, பல தியாகங்களைச் செய்ததால்தான் வெண்கலப் பதக்கத்தை வெல்ல முடிந்தது.
ஒலிம்பிக்கில் பல ஆண்டுகளாக ஹாக்கி போட்டிகளில் எந்தப் பதக்கமும் பெறவில்லை. தற்போது நாங்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றுவிட்டோம், நீண்டநாள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது" என்றார்.
ஊக்கம் அளித்த பிரதமர்
டெல்லி விமான நிலையத்தில் அவர்களின் அணிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து மன்பிரீத் கூறியதாவது, "எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்க்கும்போது ஒட்டுமொத்த நாடே எங்களை வரவேற்றது போல் இருந்தது" என்றார்.
பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதி தோல்விக்கு பின் பிரதமர் மோடி இந்திய அணியுடன் அலைபேசியில், "எந்த அழுத்தமும் இல்லாமல் அடுத்த போட்டியில் கவனத்தைச் செலுத்துங்கள், நாடே உங்கள் பக்கம்" என்று ஊக்கமளித்ததாக மன்பிரீத் நினைவு கூர்ந்தார்.
வருங்கால ஹாக்கி வீரர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மன்பிரீத், "ஒருவர் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை வைத்துக்கொண்டு, அதற்காக கடினமாக உழைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும்" என்றார்.
இதையும் படிங்க: Exclusive: பதக்கம் வெல்லும் முனைப்பில் காயத்துடன் ஆடினேன்- பஜ்ரங் புனியா!